தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு பாடம் என்று நடிகை லதா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவாக்கப்படுகின்றது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்“ என்ற பெயரில் படமாக தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணன் ‘எம்.ஜி.ஆர்’ படத்தை இயக்கி தயாரிக்கின்றார். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்கின்றார்.
எம்.ஆர்.ராதாவாக பாலா சிங், டைரக்டர் பி.ஆர்.பந்துலுவாக வை.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, போய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீன தயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.
‘எம்.ஜி.ஆர்’ படத்தின் முன்னோட்டத்தை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக நடிகை லதா கலந்துக் கொண்டார்.
‘எத்தனையோ நடிகர்களும் தலைவர்களும் வருகிறார்கள். போகிறார்கள். நானும் எத்தனையோ பேருடன் பழகி இருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஈடாக யாரும் வர மாட்டார்கள். அவர் பாமரனின் நெஞ்சங்களில் இடம்பெற்றவர். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் அவரை மறக்கவில்லை.
அவர் தன்னை பெரிய அறிவாளியாகவோ புலமை வாய்ந்தவராகவோ காட்டிக்கொண்டதில்லை. படத்தில் சொன்ன கொள்கைகள்படி வாழ்ந்து காட்டியவர். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எனவே இந்த படம் காலத்தின் தேவை. அவரது வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும்.