குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான விசேட செயற்றிட்டம் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளி தரன் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நா டாளுமன்ற நிதிக்குழு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் மேலும் கூறுகையில்,
2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் அகதிகளாக இருந்த 1500 பேர் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்கள். அவர்களுக்கான விசேட செயற்றிட் டங்கள் குறித்து வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவேண்டும்.
குறிப்பாக தமிழகத்தில் இன்னும் 80 ஆயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 15 ஆயிரம் பேர் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே திரும்பி வருகிறவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை அவதானிக்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தில் இருந்து மீண்டும் திரும்பி வருகிற குடும்பங்கள் பூரணமாக வருவதில்லை. பகுதி பகுதியாகவே திரும்பி வருகிறார்கள். எனவே இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்து அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான விசேட செயற்றிட்டங்களை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கவேண்டும்.