இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரின் காணியில், விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபால தலைமையிலான அணியினர் இந்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து, தங்கம் இருப்பதாக கருதப்பட்ட இடத்தை தோண்டும் போது, அந் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பெயரும் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக கைதான நபர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறை தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.