கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிரக்கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள்கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வீதிகள்…
கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணிக்காக பல பகுதிகளில் இருந்திம் வருகை தரும் மக்கள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடவுள்ளனர். பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை, அரமர சந்திப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த பேரணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆமர் வீதி, டெக்னிகல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக சில மாவட்ட மக்கள் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை மக்கள் பேரணியாக வருகை தர உள்ளனர். மேலும் சிலர் மருதானை, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாகவும், சிலர் கொம்பனிவீதி ஊடாகவும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடை பயணமாக வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண ரீதியாக பிரிந்து 06 ஊர்வலங்களாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஒன்று கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து 18 பேருந்துகள் – யாழிருந்து 2 பேருந்துகள்…
கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள “மக்கள் பலம் கொழும்புக்கு” பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வெளி இடங்களில் இருந்து பேருந்துகள் மூலம் மக்கள் சென்ற வண்ணமுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இன்று அலுவலக நாள் என்ற போதிலும் கொழும்பு நகர வீதிகள் நெரிசலற்று இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் அலரி மாளிகை மற்றும் விஷேட மேல் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது. இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து 18 பேருந்துகள் வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 02 பேருந்துகளில் சுமார் 100 பேர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குருணாகலில் இருந்து சுமார் 750 பேருந்துகள் வருகை தருவதாக முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் கூறியுள்ளதுடன், கண்டியில் இருந்து 186 பேருந்துகள் வருகை தருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ கூறினார். எவ்வாறாயினும் இதுவரை கொழும்பில் எவ்வித போக்குவரத்து நெரிசலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்களோ பதிவாகவில்லை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு இன்று தூங்கா நகரமாக மாறும்….
´மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (05.09.18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட பேரணி மூலம் எந்தவொருநபரையும் கஷ்டத்திற்கு உட்படுத்துவது நோக்கம் இல்லை எனவும் இருப்பினும் பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொழும்பிற்கு வருவதானால் கொழும்பு இன்று தூங்கா நகரமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு
´மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறையினர் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் காலி முகத்திடலிலும் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.