குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.குப்பிளான் வடக்கில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, பாடபுத்தகங்கள், உள்ளிட்ட பல்கலை கழக மாணவியின் உடமைகளை தீக்கிரை ஆக்கி , வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு அக்கும்பல் தப்பி சென்றுள்ளது. குப்பிளான் வடக்கில் நேற்று புதன் கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலக்க தகடுகள் அற்ற 04 மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி கட்டியவாறு வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் குறித்த வீட்டிற்குள் புகுந்து வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். தொடர்ந்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நெருக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி வீட்டு உரிமையாளரின் மகளான யாழ்.பல்கலைக்கழக மாணவியின் அறைக்குள் புகுந்த கும்பல் மாணவியின் பாட புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் , கட்டில் , என்பவற்றை தீயிட்டு கொளுத்தி உள்ளது.
பின்னர் மாணவியின் அறையில் இருந்த அலுமாரியை திறந்து அதனுள் இருந்த 2 இலட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுண் நகை என்பவற்றை குறித்த கும்பல் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றார்கள்.