294
கிளிநொச்சி மாவட்டம் வறட்சியால் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் கடுமையான மழை வீழ்ச்சி மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல பகுதிகளை வறட்சி வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது.
மேய்ச்சலின்றி கால்நடைகள்!
மேய்ச்சலற்ற நிலையில் கால்நடைகள் பெரும் அவதிற்கு உள்ளாகியுள்ளன. தரையில் எங்குமே புற்களை காண முடியவில்லை. பனை ஓலைகளையும், காய்ந்த தென்னை ஓலைகளையும் தின்று தமது நாட்களை நகர்த்த வேண்டிய நிலைக்கு கால்நடைகள் தள்ளப்பட்டுள்ளன. மேய்ச்சலின்றிய நிலையில் கால்நடைகளின் நிலையைப் பார்ப்பது மிகவும் வேதனை தரும் ஒன்றாக மாறியுள்ளது. அத்துடன் நீர் நிலைகள் வற்றியமை காரணமாக கால்நடைகள் குடிநீருக்கு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
குடிநீர் இல்லாத நிலை
வீடுகளில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. குளங்கள், நீர் நிலைகளும் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் குடிநீருக்கு மக்கள் பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர். சுமார் 50 கிராமங்கள் கிளிநொச்சியில் குடிநீர் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு பிரதேச சபைகள் குடிநீரை பவுசர் மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முறிப்பு பகுதி மக்கள் பாரிய நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இக் கிராமத்தில் சுமார் 250-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அரைக்கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகச் சென்று கிணறு ஒன்றிலிருந்து மக்கள் குடிநீரைப் பெற்று வருகின்ற போதிலும், குறித்த கிணறும் தற்போது வற்றிப்போயுள்ளதால் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏனைய அடிப்படைத் தேவைகளுக்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முறிப்புக் குளத்திற்கு சென்று நீரைப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதாக முறிப்பு பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை ஊற்றுப்புலம் பகுதிக்கு பிரதேச சபையால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை 2000 லிட்டர் நீர் வழங்கப்படுகின்ற போதிலும், அவை தமக்கு போதுமானதாக இல்லை என மக்கள் குறிப்பிட்டனர். வள்ளுவர் பண்ணை மற்றும் நாவலர் பண்ணை ஆகிய பகுதிகளுக்கும் வறட்சி பாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோணாவில் கிழக்கில் 200-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மக்களும் கால்நடைகளும் குடிநீரின்மையால் பெரும் இன்னல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
நூறடிக் குழாய்களிலேயே நீர் வற்றியது
நூறு அடி, நூறுக்கு மேற்பட்ட அடி ஆழம் கொண்ட குழாய்க் கிணறுகளில்கூட தண்ணீர் வற்றியுள்ளன. இதனால் பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன. பாடசாலைகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவது மிகவும் ஆபத்தானது. இதேவேளை பாடசாலைக்கு வறட்சி அனர்த்த காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியின் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளே இதில் அதிகமும் பாதிக்கப்பட்டுள்ளனது. பூநகரி, தர்மபுரம், முரசுமோட்டை, அக்கராயன், வன்னேரி போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை இப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெம்மையும் பிரதேச மக்களுக்கு பெரும் அசளகரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்க அதிகாரின் கடமை!
மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து வறட்சி அனர்த்த கால மக்களின் பிரச்சினைகளுக்கு நிவாரணங்களை வழங்கி இவர்களை பாதுகாக்க வேண்டும். குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாத காலத்தில் பருவ மழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே குறித்த காலப் பகுதிகள் வரை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்க அதிகாரிகள் தீர்வுகளை முன் வைப்பது அவர்களின் கடமையாகும்.
படங்கள் – இணையம்
Spread the love