யுத்தம் தொடர்பாக சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தவறான பிரசாரங்கள் காரணமாக, யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் செய்த வேலைகள் சம்பந்தமாக சர்வதேசம் அறிந்துகொள்வதற்கும், படிப்பினைகளை கற்றுக் கொள்வதற்கும் இருந்த சந்தர்ப்பம் இல்லாது போனதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் சம்பந்தமாக தவறான கருத்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதால், துரதிஷ்டவசமாக சர்வதேசத்திற்கு வழங்கக் கூடிய பல படிப்பினைகளை, வழங்க முடியாது போனதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலத்தில் புனர்வாழ்வளித்தல், மிதிவெடி அகற்றல் மற்றும் வடக்கின் அபிவிருத்தி போன்றவற்றில் நாட்டின் இராணுவத்தினர் பாரிய பங்களிப்பு வழங்கியிருந்ததாகவும், அவை உரிய முறையில் உரிய இடங்களுக்கு போய்ச் சேரவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக செயலாற்றும்போது ஏனையவர்களை விட சிறந்த சேவையினை வழங்கினார்களென தெரிவித்துள்ளார். குறிப்பாக “ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக நியமிப்பதற்கு முக்கிய காரணம் அவர்களது சேவைக்கு வழங்குகின்ற மரியாதையாகும். அத்துடன் இவர்கள் ஏனையவர்களை விட சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு காரணம் இவ்வதிகாரிகள் ஆயுதப்படைகளில் பணியாற்றியதனால் நாட்டையும் மக்களையும் பற்றிய நல்லதொரு அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது இராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்கு மனிதர்களைப் பற்றிய புரிதலும், அவர்களை எவ்வாறு வழிநடத்துவது தொடர்பாக போதிய அறிவும் காணப்படுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்
குறிப்பாக “வியட்னாம் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற போர்களை அடிப்படையாக வைத்து நூல் எழுதப்பட்டதை போன்று இலங்கை போர் தொடர்பாக நூல் எழுதப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக இந்திய ஜெனரல் ஒருவரும் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பின்னரே, நான் கமல் குணரத்ன போன்ற முப்படைத் தலைவர்களின் எழுதுகோல்களில் இலக்கியங்கள் வெளிப்படும்படியாக ஊக்குவித்தேன்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.