முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக வழக்குத் தொடருமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென அவர் உரையாற்றியதன் மூலம் அவர், குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் சரத்துக்கு அமைவாக குற்றம் இழைத்துள்ளார் எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 157 ஆவது சரத்தினை மீறியுள்ளதாகவும் அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறும் சட்ட மா அதிபர் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.