கஜேந்திரகுமார் சிறுபிள்ளைத் தனமான கேள்வி கேட்கக் கூடாது…
முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவருடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இணையும் என எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளைத்தனமானது என அவ் இயக்கத்தின் செயலாளரும், பேச்சாளருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், சிறிகாந்தா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த சிறிக்காந்தா, “முதலமைச்சருடைய கட்சியில் நாம் இணைவோம் என தெரிவித்திருந்தால் அதையிட்டு நாம் அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவர் விரும்பினால் கட்சி ஆரம்பிக்கலாம். அது அவருடைய உரிமை. ஆனால் நாங்கள் அவருடன் இணைந்து கொள்கிறோம். இணைந்து கொள்வோம் என அவர் எதிர்பார்த்தால் அது என்னைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமானது.
ஏனெனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். நாங்கள் கூட்டமைப்புக்குள்ளே பயணிக்கின்றோம். ஆனால் ஒரு விடயத்தை விக்கினேஸ்வரனுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களை நம்பித் தான் முதலமைச்சராக முன்நிறுத்தினோம்.
எமது மக்களும் அபரிதமான ஆதரவைத் தந்தார்கள். எமது மக்கள் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பை நீங்கள் தவறாக எடை போட்டு விடக் கூடாது. அவர்கள் எதிர்பார்ப்புக்களுடன் கூடிய ஒரு மதிப்பை வைத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் கூட்டமைப்புடன் நீங்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
யார் உங்களுக்கு எதைச் சொன்னாலும், எந்தப் போதனையைக் கொடுத்தலும், நீங்கள் சரியாக சிந்தித்து, அறிவுபூர்வமாக முடிவெடுத்து, எமது இனத்திற்கு எது நல்லது என்று தீர்மானித்து, கூட்டமைப்பினுடைய ஒற்றுமையை உங்களுடைய எந்தவொரு செயற்பாடும் பாதிக்காத விதத்திலே நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தான் எமது மக்களுடைய விருப்பம்” எனத் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனது கருத்துக்கள் கூட்டமைப்புக்குள் உடைவை ஏற்படுத்துகின்றதா என கேள்வி எழுப்பியற்கு பதில் அளித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகந்தா,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உடைவை ஏற்படுத்துவதாக சுமந்திரனை நாம் கருதவில்லை. அப்படி நாம் கருதி இருந்தால் இன்றைக்கு நான் தம்பி சுமந்திரனை ஒரு பிடி பிடித்திருப்பேன். ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை.
அவருடைய கருத்துக்கள் ஆட்சேபத்திற்கு உரியதாக இருக்கிற பொழுது நாங்கள் எங்கள் கருத்துக்களை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக ரெலோ தலைமை, புளொட் தலைமைகளைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களையிட்டு நாம் எங்களுடைய கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கிறோம். ஆனால் அதற்காக அவர் வெளியிட்ட கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்று நாங்கள் கருதவில்லை.
அத்துடன், “தற்போது இருப்பது ஒற்றையாட்சி அரசியல் முறையாகும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிலான நாடாளுமன்றத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் என்ற பொறுப்புக்களுக்கு அடுத்தபடியாக குழுக்களின் பிரதி தலைவர் என்ற பதவியை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டதன் மூலமாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாக கஜேந்திரகுமார் சொல்லியிருக்கின்றார்.
அவரிடம் ஒன்றை கேட்கின்றேன் நீங்களும் இரு தடவை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தீர்கள் அப்படியானால் நீங்களும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தீர்கள். சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை சட்டம் படித்த கஜேந்திரகுமார் எழுப்பக்கூடாது.” எனவும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.