ரபேல் போர் விமானம் கொள்வனவு செய்வதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் தரகு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற சிரேஸ்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 59 ஆயிரம் கோடி ருபாய்க்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ஒரு ரபேல் விமானம் 560 கோடி ரூபாக்கு வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அதே விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளார்கள்.
ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து டஸ்சால்ட்-ரிலையன்ஸ் எனும் பெயரில் கூட்டாக பாதுகாப்பு தளபாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
எனவே அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ரபேல் விமானம் வாங்குவதில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக ரபேல் விமானம் வாங்குவதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடையும் வகையில் தேசத்தின் பாதுகாப்பில் ஆளும் பா.ஜ.க அரசு சமரசம் செய்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.