கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின், ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியத்துறையின் தலைவரான பேராசிரியர் பிரசாத் பணியன் தலித் மாணவ ஆய்வாளருக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கந்தோதி நாகராஜு என்ற தலித் மாணவ ஆய்வாளர் பல்கலைக் கழக விடுதியில் தீ எச்சரிக்கை அறையில் உள்ள கண்ணாடியை உடைத்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஆங்கிலத் துறைத் தலைவர் பிரசாத் பணியன், “ஒரு சிறிய தவறு கிரிமினலாக்கப்பட்டு குற்றவாளியாக அவரை கைது செய்திருப்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பல்கலை. வளாகத்துடன் முடிந்திருக்க வேண்டிய விவகாரம் ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. கண்ணாடியை உடைத்ததற்காக நம் மாணவர் ஒருவர் சிறையின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பது கடும் வருத்தங்களை ஏற்படுத்துகிறது” என கடந்த ஓகஸ்ட் 11ம் திகதி பதிவிட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று பேராசிரியர் பணியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் பலமுறை பல்கலைக் கழகத்தை விமர்சித்துள்ளார். அவர் பணியாற்றும் துறையிலிருந்தே இன்னொருவர் இவர் மீது முறைப்பாடு கூறியுள்ளார், இவரது போக்கு சரியல்ல என்று துணை வேந்தர் கே.ஜெயபிரசாத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.ஆனால் இது முதல் முறையல்ல, பல்கலைக் கழக செயல்பாடுகளை நியாயமாக விமர்சித்தாலே இப்படி நடவடிக்கை எடுப்பது வழக்கமாகி வருகிறது என பலரும் இதனை எதிர்த்துள்ளனர். குறிப்பாக சமூகவலைத்தளத்தில் பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கையை பல பேராசிரியர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கண்டித்துள்ளனர்.
“பணியனை குறிவைத்ததன் மூலம் பல்கலைக்கழகத்தின், கேரள சமூகத்தின் நீண்ட ஜனநாயக, நீதிசார் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது” என்று எழுத்தாளர் சுனி. பி.இலாயிதோம் கண்டித்துள்ளார்.