குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினை பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற திருமண வைபவத்தின் போது பரிமாறப்பட்ட மாமிச கறிகள் பழுதடைந்தமையால் , அதனை உட்கொண்ட மூவர் பாதிக்கப்பட்டனர்.
அது தொடர்பில் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு திருமண வீட்டார் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவல்துறையினர் ; மற்றும் அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர். அதனை கேள்வியுற்று குறித்த மண்டபத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பழுதடைந்த உணவு பொருட்களை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது மண்டபத்தில் வழங்கப்பட்ட ‘ஐஸ்கிறீம் கப்பில்’ உற்பத்தி திகதி , முடிவு திகதி என்பன பொறிக்கப்படவில்லை. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த உணவு பொருட்களை கைப்பற்றி மேலதிக நடவடிக்கைக்காக எடுத்து சென்றனர்.
பின்னர் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்,நீதிவான் நீதிமன்றில் மண்டப முகாமையாளரான பெண்ணுக்கு எதிராக , பொதுசுகாதார பரிசோதகரால் , பழுதடைந்த கறிகளை உணவுடன் சேர்ந்து பரிமாறியமை , மருத்துவ சான்றிதழ் பெறாமல் உணவு வகைகளை கையாண்டமை ஆகிய குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
அதனை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி. சதிஸ்தரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார்.