ஊழல் வழக்கு தொடர்பில் 12 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியான 72 வயதான லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula Da Silva) அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். இதனை லூலாவின் தொழிலாளர் கட்சியின் தலைவர் கலெய்சி கொப்மன் அறிவித்துள்ளார்.
லூலா மீதான ஊழல் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிரேசிலின் தேர்தல் மேல் நீதிமன்றம் அவரை தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதில் தடை செய்திருந்தது. லூலாவை விடுதலை செய்ய வேண்டுமென கடந்த 5 மாதங்களாக சிறைச்சாலைக்கு வெளியே முகாமிட்டு: போராட்டம் நடத்தும் அவருடைய ஆதரவாளர்களுக்கு அவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் வாசித்து காட்டப்பட்டது. அதில் ஒக்டோபர் 7ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் தனக்கு பதிலாக பெர்னான்டோ அட்டாட் போட்டியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆண்டு முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை லூலா பிரேசிலின் ஜனாதிபதியாக பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.