“கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”
விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.