முன்னாள் போராளிகளுக்கு எவரும் வேலைவாய்ப்பினை வழங்கவில்லை என்ற அதிகாரிகளின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என தொழிலதிபர் கு. பகிரதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டு கலுத்து தெரிவிக்கும் போது சமூகத்தில் முன்னாள் போராளிகளுக்கு எவரும் தொழில் வாய்ப்பினை வழங்குகிறார்கள் இல்லை என்ற கருத்தை பொதுப்படையாக தெரிவித்திருந்தனர். இதனை ஊடகங்களில் செய்தியாக பார்க்கும் போது தொழில் வாய்ப்பினை வழங்குகின்ற எங்களை போன்றோருக்கு கவலையினை ஏற்படுத்துகிறது.
சுமார் 122 பேர் பணியாற்றுகின்ற எங்களுடைய ஓப்பந்த நிறுவனத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பத்து முன்னாள் போராளிகளுக்கு ஊழியர் சேமலாப நிதியுடன் நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். மேலும் வேலைவாய்ப்பினை வழங்கத் தயாராக உள்ளோம்.எனத் தெரிவித்த அவர்.
2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கு அமைவாக குறைந்தது ஜந்து முன்னாள் போராளிகளுக்கு வேலைவாப்பினை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முன்னாள் போராளிக்கு ஆக கூடியது பத்தாயிரம் ரூபா வீதம் சம்பளத்தில் 50 வீதத்தினை வழங்குவதற்கு அரசு அறிவித்திருந்தது. இருந்தும் எனது நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இருந்தே இறுதி நேரத்தில் இதற்கான கடிதம் கிடைப்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இருந்து எவ்வித தொடர்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.