குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகங்களுக்கு எதிராக போராடுவதை எந்த வித ஜனநாயக வாதிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டு ஊடகம் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக தெரிவித்து சிலரால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஊடகங்கள் தவறான அறிக்கையிடல் மேற்கொண்டாலும் அதற்கான பதில் நடவடிக்கைகள் ஜனநாயக நாட்டில் பல உள்ளன.அதற்கு மக்கள் ஒரு சிலரை தூண்டிவிட்டு பத்திரிகைகளை கொளுத்துவது தீர்வை தராது. ஆனால் எமது பிரதேசத்தில் வடக்கு மாகாண உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் தூண்டுதலினால் அவரது ஆதரவாளர்கள் இன்று குறித்த ஊடகத்திற்கு எதிராக மற்றுமொரு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் நடந்தது என்ன.பொதுமக்கள் போக்குவரத்து தடைப்பட்டதும் சகோதர இனங்களுடன் முறுகல் நிலையுமே ஏற்பட்டமை ஆகும். குறித்த ஊடகத்தை நாடி மறுப்பறிக்கை வழங்குவதை விடுத்து அதனை சீண்டும் விதமாக குரோதமாக செயற்படுவதைறே காண முடிகிறது.
மேலும் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை கூட இருக்கின்றது.அங்கு முறைப்பாடு செய்தால் கூட இத்தனைக்கும் ஒரு தீர்வொன்று கிடைத்திருக்கும். எனவே ஊடகங்களை சீண்டுவதை விடுத்து ஆரோக்கியமாக செயற்படுமாறு மாகாண சபை உறுப்பிரை கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்