கல்ப் பத்திரிகை பாராட்டு…
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் தனது ஒரே ஒரு சிக்கன நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 185 கோடி ரூபாயை மீதப்படுத்தியதற்கு டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் பிரதமர் இல்லத்தில் தான் தங்கப் போவதில்லை. எனவும் இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் நோக்கில் பிரதமர் மாளிகையில் இருக்கும் சொகுசு கார்களை ஏலத்தில் விடப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என கல்ப் பத்திரிகை இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு, பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக 70 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மேலும், உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு 15 கோடியும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக 1.5 கோடி ரூபாயும் செலவிடப்படும்.
இந்நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் 185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார். இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தும் என அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.