பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யும் தேவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு இல்லை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரி ஒருவரை கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறப்படும் செய்தி உண்மையற்றது என அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கப்பம் பெறுவதற்காக 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஆரம்பபிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக லெப்டினென்ட் கமாண்டர் சம்பத் முனசிங்க மற்றும் லெப்டினென்ட் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதிசன்சலாகே பிரசாத் சந்தன குமார ஹெட்டியாராச்சி எனப்படும் நேவி சம்பத் என்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேவி சம்பத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி, வைஸ் அட்மிரல் ரவி விஜயகுணவர்தனவுக்கு வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.
எனினும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியை கைது செய்யும் திட்டத்தில் இருப்பதாக பலர் ஊடகங்கள் ஊடாக பொய்ப் பிரச்சாரம் செய்ததாகவும், அவ்வாறான தேவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இல்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.