அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆண் ஒருவரும் 21 வயதான பெண் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் இசைத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளையும் உட்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாகவும் . அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
சிட்னி சர்வதேச ரெகாட்டா மையத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-அமைச்சர் கிளாடிஸ் கூறும்போது, நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இது ஒரு பயங்கரமான சம்பவம் எனவும் தெரிவித்த அவர் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரைகள் உட்கொண்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.