குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுணர் வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன தமது கடமைகளை இன்று (17.09.2018) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடந்த மாதம் 30.08.2018 அன்று மத்திய சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்று வைத்தியநிபுணர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான (settlement leave) 14 கடமை நாட்கள் விடுமுறையின் பின்னர் அவர் இன்று தமது கடமைகளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
தமது வெளிநாட்டுக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்தபின்னர் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வடக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகள் இதனை விசாரித்து அறியாத நிலையில், சிலர் மக்களைப் பிழையாக வழிநடத்தி கிளிநொச்சியில் மத்திய அரசுக்கும், சுகாதார அமைச்சிற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு கடந்த 31.08.2018 அன்று தெரிவித்திருந்தது.
இனிவரும் காலங்களிலாவது மத்திய சுகாதர அமைச்சும் மாகாண சுகாதார அமைச்சும் சுமுகமான தொடர்பாடல்களை மேற்கொண்டு இடையறாத சுகாதாரசேவைகள் மக்களுக்குக் கிடைக்க ஆவன செய்யவேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.