196
வலம்புரி நாளிதழின் செய்தியாளரிற்கு வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரது உதவியாளரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
அதிலும் குறிப்பாக பெண்கள் தமிழ் ஊடகத்துறையில் காலடியெடுத்து வைக்க அச்சப்பட்டு பின்னடிக்கின்ற சூழலில் இத்தகைய போக்கு ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லையென்பதையும் சுட்டிக்காட்ட ஊடக அமையம் விரும்புகின்றது.
ஏற்கனவே சிறுகும்பல் ஒன்றினால் அண்மையில் வலம்புரி நாளிதழின் பிரதி எரிக்கப்பட்டமை தொடர்பில் இனங்களிடையே தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தும் சூழல் பற்றி யாழ்.ஊடக அமையம் எச்சரிந்திருந்ததை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
அதேவேளை ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமல்செய்யும் நடவடிக்கையாகும் என புரிந்துணர்வுடன் கண்டனத்தை பதிவு செய்துள்ள யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் அவர்களிற்கு எமது நன்றியறிதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் அரச படைகளாலும் அவர்களது பங்காளிகளாலும் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஊடகஅலுவலகங்கள் மீதும் அரங்கேற்றப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச்செய்யப்படுதல்களால் நாம் இழந்தவை அதிகம்.
குறிப்பாக ஊடகத்துறையிலிருந்து பெருமளவிலானோர் வெளியேறும் சூழலும் இதனால் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது சூழல் மாறி அண்மைக்காலமாக தமிழ் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களின் அல்லக்கைகளும் அச்சுறுத்தல்களை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடராகவே வலம்புரி பத்திரிகை அலுவலக செய்தியார் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதையும் குறித்த செய்தியாளர் தனது பாதுகாப்பினை கோரியிருப்பதனையும் நாம் பார்க்கின்றோம்.
அச்சுறுத்தல்கள் மிக்கதொரு சூழலில் மக்களுக்கு உண்மைத்தகவல்களை எடுத்து செல்ல ஊடகங்களால் முடியாதென்பது சொல்லித்தெரியவேண்டியதொன்றல்ல.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் -முஸ்லீம் மக்களது இணைந்த வாழ்வு தவிர்க்க முடியாத பின்னிப்பிணைந்ததொன்று. காலம் காலமாக அதனை சிதைத்துவிடும் நடவடிக்கைகள் அரசினாலும் அதனது முகவர்களாலும் அரங்கேற்றப்பட்டே வருகின்றது.
தற்போதைய சூழலில் யாழில் அரங்கேறும் அண்மைய சம்பவங்கள் அதனை மீள உறுதிப்படுத்துவதாகவே கருதவேண்டியுள்ளது. மீண்டும் இரு இன மதத்தலைவர்களிடமும் இத்தகைய சதிகாரக்கும்பல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க கோருவதுடன் மத,இன நல்லிணக்கத்தை பேண உண்மையாகவும் நேர்மையுடன் சதிகாரர்களை புறந்தள்ளி இணைந்து செயற்பட முன்வருமாறு வேண்டுகின்றோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love