கலஹா வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 1.95 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாந்தனி சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மாதத்துக்குள், இந்த வைத்தியசாலையை மீளத் திறக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கலஹா வைத்தியசாலையைத் திறக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். வைத்தியசாலையின் திருத்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெகுவிரைவில் வைத்தியசாலை, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையின் யன்னல்கள், கதவுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறியளவிலான திருத்தப் பணிகளே எஞ்சியுள்ளதாகவும் அதனை ஒரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செ;துவிட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கலஹா வைத்தியசாலையில், கடந்த 28ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பிரதேச மக்கள், வைத்தியசாலையின் மீது தாக்குதல் மேற்கொண்டமையையடுத்து வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலையும் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.