புகையிரத கடவைக் கதவினை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய சம்பவம் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு புகையிரத கடவைக் காப்பாளராக பணியாற்றச் சென்ற 28 வயதான குந்தன் பதாக் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது எக்ஸ்பிரஸ் புகையிரதம் வருவதையொட்டி வழக்கம் போல் கதவினை மூடியிருந்தார்.
இதன்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் புகையிரத உடனடியாக திறக்கும்படி குந்தன் பதாக்கிடம் கேட்டதற்கு புகையிரதம் வரும் நேரம் என்றபடியால் கதவினைத் திறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து குந்தன் பதாக்கின் 2 கைகளையும் வெட்டியதில் அவரது 2 கைகளும் துண்டாகின. மேலும் அவருடைய கழுத்து, கால் ஆகிய பகுதிகளிலும் பலமாக தாக்கிவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் குந்தன் பதாக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வெட்டப்பட்ட அவருடைய கைகளை இணைப்பதற்காக தீவிர அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக புகையிரத நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக புகையிதை நிலைய காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.