இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் டொலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.