Home இலங்கை ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்

ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்

by admin

கிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்; நீர் வழங்குமாறு ஏழு கோரிக்கைகளை முன்வைத்து திருவையாறு ஊர் மக்கள் வடமாகாண முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். விவசாயத்தையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இந்த ஊரைச் சேர்ந்த 49 விவசாயிகள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்;பட்ட திருவையாறு ஏறறு நீர்ப்பாசனம் திட்டம் வேலைக்ள முடிவுற்ற நிலையிலும், விவசாயத்திற்கு இன்று வரை நீர் வழங்கப்படவில்லை.

நீர் வழங்கப்படாமையினால் விவசாயிகள், கால்நடைகள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

நீர் வழங்கப்படாமையினால், – குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கை மேற்கொண்டவர்கள் நீர் பற்றாக்குறையினால் பயிர்ச்செய்கையில் முழுமையான பலனைப் பெற முடியவில்லை.

கால்நடைகளுக்குக் குடிநீர் இல்லாமற் போயுள்ளது.

வான்பயிர்கள் அழிவுறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது

கோடையின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் திருவையாறு விவசாயிகள் வாடுகின்றார்கள். மறுபுறத்தில் 15 அடி மட்டத்திற்கு நீர் இருக்கின்ற போதிலும், நீர்ப்பாசனத் திணைக்களம் திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நீர் வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இதனால், இந்த விவசாய அபிவிருத்தித் திட்டம் யாருடைய சட்டைப் பையை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டது என வினவத் தோன்றுகின்றது.

மேலும் தண்ணீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள காணிகளில் 30 வீதமானவற்றுக்கு நீர் பாயாத நிலைமையே காணப்படுகின்றது.

இந்த தில்லுமுல்லு வெளிப்படாமல் இருப்பதற்காகவே திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அதிகாரிகள் நீர் வழங்காமல் இருக்கின்றார்களோ என்று எண்ணுவுதிலும் தவறில்லை.

திருவையாறு பாலம்

திருவையாறு நீர் விநியோக வாய்க்காலைத் தாண்டி விவசாயகிள் தமது காணிகளுக்கச் செல்ல முடியாதுள்ளது என நாங்கள் அரசாங்க அதிபருக்கு எழுதியிருந்த கடிதத்திற்கமைய அரசாங்க அதிபர் பணித்ததன் பேரில் நீர்ப்பாசனத் திணைக்களம் நான்கு சலவைக் கற்களை ஒவ்வொரு காணிக்கும் வழங்கியுள்ளது,

இருபதாம் நூற்றாண்டில் பாலம் அமைப்பதற்கு சலவைக்கல்லை ஒத்த கல்லைப் பயன்படுத்துவது உலகத்திலேயே திருiயாறு கிராமத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. எமது ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நீர் வரும் என்ற நம்பிக்கையில், இதையும் பாலம் என ஏற்பதற்கு நாங்கள் தாயராக இருந்தோம். ஆனால் நீர் வரவில்லை. எனவே, இந்த சலவைக் கற்களை பாலம் என ஏற்பதற்கு இனியும் நாங்கள் தயாராக இல்லை.

பாலம் இல்லாததால், விளைந்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. யாரேனும் உயிர் இழந்தால், அவருடைய உடலை வெளியில் வீதிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அத்துடன் கால்நடைகளின் கருக்கலைவுக்கு பாலம் இல்லாமையே காரணமாக உள்ளது.

அபிவிருத்தி என்ற பெயரில் அகழப்பட்ட மண்ணும் அழிக்கப்பட்ட பனைகளும்

கோவிந்தன் கடைச் சந்திக்கு அண்மையில் நீண்ட காலமாக நர்ஙகள் பாதுகாத்து வந்த மண் தற்போது அகழப்பட்டு, அங்கு பாரிய குழியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடம் ஏன் அகழப்படுகின்றது என வினவியபோது, நீச்சல் தடாகம், தாமரைத் தடாகம் அமைப்பதற்காக மண் அகழப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர்தான் உண்மையை மறைப்பதற்காக இந்தக் கதைகள் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டோம்.

அதேபோல், வில்சன் வீதிக்கும் திருவையாறு கிராமத்துக்கும் இடையேயான நிலத்தில் மன்ணகழ்வு மேற்கொள்ளப்பட்டது. என்ன தேவைக்காக இது நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் கசிந்தபோது, மில்க் வைற் நிறுவனர் அமரர் கனகராசா ஐயா அவர்களால் நாட்டப்பட்ட பனை மரங்களை பைக்கோ மூலம் பிடுங்கி, மண் அகழ்ந்த கிடங்குகளுக்குள் போட்டு மூடினர்.

நீச்சல் தடாகத்திற்கு என சொல்லப்பட்டு மண் அகழப்பட்ட இடமானது, எமது கால்நழைடகளின் கோடைகால மேய்ச்சல் தரையாகும். மண் அகழப்பட்ட அந்த பாரிய குழி தற்போது முதலைகளின் சரணாலயமாக மாறி, எமது கால்நடைகளின் அழிவுக்கு வித்திடப்பட்டுள்ளது. இத்தனை சொல்லொணா துயரங்களை நாங்கள் சுமந்தும் மௌனம் காத்தது, தண்ணீர் வரும் என்ற ஒரே நம்பிக்கையில்.

இவ்வளவு துன்பங்களையும் நாம் அனுபவித்தும் வரட்சியின்போது நீரை வழங்காது விட்டால் யாருடைய நலனுக்காக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது?

எங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதாயின்,

1 வான்பயிர்கள், கால்நடைகளைக் காப்பாற்ற உடனடியாக நீர் வழங்கப்பட வேண்டும்

2 பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்கப்பட வேண்டும்

3 சலவைக்கற்கள் அகற்றப்பட்டு, தரமான பாலங்கள் கட்டித்தரப்பட வேண்டும்

4 இந்த வாய்க்கால்களின் ஊடாக நீர் பாய்ச்ச முடியாத 30 வீதமான காணிகளுக்கு நீர் பாயக்கூடியவாறு, ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்

5 மண் அகழப்பட்ட பாரிய குழி நிரப்பப்பட்டு, மீண்டும் மேய்ச்சல் தரையாக மாற்றப்பட வேண்டும்

6 அழிக்கப்பட்ட பனை மரங்களுக்குப் பதிலாக (நூற்றுக்கும் மேற்பட்ட) அதே வயதுடைய பனை மரங்கள் நாட்டப்பட வேண்டும்

7 குறித்த மண் அகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

மேற்படி ஏழு விடயங்களையும் தாங்கள் முதல் சுற்று ஆட்சியில் இருக்கும்போதே, விவசாயிகளாகிய எமக்குக் கிடைக்க ஆவன செய்து உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தக் கடிதத்தின் பிரதி கிளிநொச்சி அரசாங்க அதிபர், வடமாகாண விவசாய அமைச்சர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், விவசாய பிரதி அமைச்சர் இ.அங்கயன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More