குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையினரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை இரண்டு நாளுக்குள் அடக்கி விடுவோம்.
காவல்துறையினரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம்.
தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் , இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம்.
அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறை சம்பவங்களை நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியிடம் யாழில் நடக் கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.
1 comment
இதை விடப் பேடித்தனமானதொரு அறிக்கையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது?
மக்கள் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பை அவர்களின் எதிர்ப்பையும் மீறிப் பொது மக்களோடு போராளிகளாக எல்லோரையுமே நயவஞ்சகமாகக் கொன்றவர், மக்கள் வெறுக்கும்/ மக்களைத் துன்புறுத்தும் ஆவா குழுவினரை அழிக்க மட்டும், சட்டம் ஒழுங்கை மதித்து அவர்களை வாழ வைப்பதாகக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்? இந்தப் பொண்ணையன் சொல்லதெல்லாம், அன்று போல் இன்றும் பொது மக்களையும் கூண்டோடு அழிக்க அனுமதி தரப்படவேண்டுமாம்! இதைச் செய்ய எவராலும் முடியுமே!
திறமை இருந்தால், வேண்டிய உத்தரவுகளை பெற்று ஆவா குழுவினரை மட்டும் சரியாக அடையாளம் கண்டு அழித்துக் காட்டட்டுமே! ஆக, ஆவா குழு என்ற பெயரில் சில கொல்லப்பட வேண்டிய அப்பாவிகளை இறக்கி அவர்களோடு பொது மக்களையும் சேர்த்து அழித்துத் தமது இருப்பை உறுதி செய்துகொள்ள, எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார், இந்த வாய் வீரன்?