பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்காவின் ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேசுவார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என பல்வேறு நிகழ்வுகளால் இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தடைப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அத்துடன் , இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச வேண்டும் எனவும் கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.