காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.
இதனால் ஆண்டுக்கு சுமார் மார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லீற்றர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருவதனால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறன.
இதனால் காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை எனவும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகளே மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணை யின் பொது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.