சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக இலங்கை வைத்திய சபையால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் வைத்திய பட்டம் பெற்ற தன்னை செயன்முறைப் பயிற்சி பெறுவதற்காக இலங்கை மருத்துவ சபை பதிவு செய்து கொள்ளாமைக்கு எதிராக மாணவி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மாணவியை பதிவு செய்யுமாறு இலங்கை மருத்துவ சபைக்கு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அந்த உத்தரவை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் இலங்கை வைத்திய சபையால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் மருத்துவ சட்டத்தின் 29 (02) சரத்தின் கீழ் சயிடம் நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்ட ரீதியானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த குறித்த மாணவியை பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதத்திற்காக அந்த மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.