அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக நிலவுகின்ற நீண்ட காலமாக முரண்பாடுகளால், பேச்சுவார்த்தைகள் முடங்கியிருந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான், தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர், மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச வேண்டும் எனவும் கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை இந்திய தரப்பு ஏற்றுக்கொண்டது.
எனினும் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் மூன்று காவற்துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அத்துடன், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு அஞ்சல் தலைகளும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.