குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்…
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து, அவற்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து, மீண்டும் தமிழ் மக்களுக்கே அதனை விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியவத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த மோசடிகள் இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையிருப்பதாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பாசிக்குடாப் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் இவ்வாறு அவர்களுக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அங்கு 2009இற்குப் பின்னர் குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்கள் ஆக்கிரமித்த காணிகளை தமிழ் மக்களுக்கே மீண்டும் விற்பனை செய்கின்றனர்.
பாசிக்குடாப் பகுதியில், 1983ஆம் ஆண்டில் ஜூலை இனப்படுகொலையுடன் தமிழ் மக்களின் பகுதிகளை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மக்கள் குடியேறியுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் இவர்கள் வெளியேறி தமது சொந்த இடங்களு்ககுச் சென்றுள்ளனர்.
தற்போது, நல்லாட்சி அரசாங்கத்தில் காணி அனுமதிப் பத்திரங்களைப் பெற்று வீடுகளை அமைத்து, அதனை அப் பகுதிகளில் வசித்த பூர்வீக தமிழ் குடும்பங்களுக்கே விற்பனை செய்துவிட்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லுகின்றனர்.
காணிகளை இழந்த தமிழ் மக்கள் தமது நிலத்திலேயே காணிகளை மீண்டும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்த்திற்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை தமிழ் மக்களின் பூர்வீக நிலமான பாசிக்குடாவில் முழுக்க பெரும்பான்மையின முதலாளிகள் காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
சுற்றுலாப் பிரயாணிகள் அதிகம் வரும் இப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பது தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் மக்கள் ஆதங்கமுறுகின்றனர். அத்துடன் தமது சொந்த நிலத்தில் தமிழ் இளைஞர்கள் கூலித் தொழிலாளியாக வேலை செய்கின்ற நிகழ்வுகளைப் பார்க்க நேர்ந்ததாகவும் குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறையாகவும், திருகோணமலையாகவும் மட்டக்களப்பு நிலவரங்களும் மாற்றப்படுகின்றன. அங்குள்ள தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கும் சூழ்ச்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நோக்கிலேயே அங்குள்ள காணிகள் மிக மோசமான முறைகளில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்…