கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் தற்கொலை வடக்கு கிழக்கில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இன்று வவுனியாவில் இடம்பெற்ற அவரது இறுதிக் கிரியைகள் நீதிக்கான ஒரு போராட்டமாகவே அமைந்திருந்தது.
மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் போதநாயகி. அவருடைய தந்தையார் தும்புமுட்டாஸ் விற்றே பிள்ளைகளை வளர்த்துள்ளார். வறுமையும் போராட்டமும் நிறைந்த வாழ்வில் ஒரு விரிவுரையாளராகபோதநாயகி வளர்ந்திருப்பது அவரது சாதனையையும் ஓர்மத்தையும் காட்டுகிறது.
எனினும் தற்கொலை என்ற முடிவுக்கு போதநாயகி தள்ளப்பட்டிருப்பது எமது சமூகத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. இதனை வெறுமனே தற் கொலையாக கடந்து செல்லுவது எதிர்காலத்தில் மேலும் பல போதநாயகிகளை உருவாக்கும் என்ற அபாயத்தினையும் நாம் உணர வேண்டும்.
இவர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவும் இவரது கணவரால் ஏற்பட்ட மனவுளைச்சல் காரணமாகவும் கணவரின் புரிதலும் அன்பும் கிடைக்காமை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்வதற்கான வாக்குமூலமாக இறுதியாக கவிதை ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
துரோகத்தனத்தால் போதநாயகி தொலைக்கப்பட்டார் என்றும் அவர் கல்விச் சாதனைகளை இழந்து கடன்காரியாகவும் சடலமாகவும் எஞ்சியுள்ளதாக இன்று அவரது வீட்டில் இடம்பெற்ற இறுதிக் கிரியைகளின்போது குடும்பத்தினரும், மக்களும் ஏந்தியிருந்த பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.
பல்வேறு நெருக்கடிகளை கடந்து சாதித்த போதநாயகியின் குடும்ப வாழ்வு எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்திருப்பதை அவர் இறுதியாக எழுதிய கவிதை வெளிப்படுத்துகிறது. திருமணமாகி ஐந்து மாதங்களில், வயிற்றில் மூன்று மாதக் குழந்தையுடன் தன்னை மாய்க்க அவர் எண்ணியிருப்பது என்பது சாதாரணமான விரக்தியல்ல.
இவரது மரணத்தையும் இவரது இறுதிக் கவிதையையும் இன்று போதநாயகியின் வீட்டில் ஏந்தப்பட்டிருந்த பதாகைகளையும் அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்றால், இத்தகைய சமூக அவலங்களுக்கு தொடர்ந்தும் வழி சமைப்பதாகவே அமையும்.
எனவே போதநாயகியின் தற்கொலைக்கு என்ன காரணம்,? அவர் தற்கொலை செய்ய எது? யார் துண்டுதலாய் இருந்தனர் என்பது தொடர்பில் உண்மைகள் வெளி வரவேண்டும். தமிழ் தேசிய முகத்தையும் கொண்டும், கலைஞர் என்ற புகழைக் கொண்டும் இவைகளை முடி மறைப்பதை அனுமதிப்பது பெரும் ஆபத்தை கொண்டது.
செய்தியாக்கம்- வவுனியாவிலிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்