இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும், வட மாகாண சுற்றுலாப் பணியகமும், யாழ்.பல்கலைக் கழகமும் இணைந்து உலக சுற்றுலா தினத்தை செப்ரெம்பர் 26 தொடக்கம் 28வரை யாழ்ப்பாண மாநகரசபை மைதானத்தில் கொண்டாடவிருக்கின்றனர். இத் தகதிகளில் காலை 9. மணி முதல் மாலை 10 மணிவரை நிகழ்வுகள் நடைபெறும். இதில் நடைபெறும் கண்காட்சியில் வட பகுதியோடும், வட பகுதி சுற்றுலாத் துறையோடும் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்பட விருக்கின்றன. அத்துடன் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் சுற்றுலாத் தொடர்பானதும், வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களும் இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன. “டிஜிற்றல் மயமாகும் சுற்றுலாத்துறை” என்ற தலைப்பில் ஒரு குழுக் கலந்துரையாடலோடு பல கலாசார நிகழ்வுகள், உணவுத் திருவிழா, சர்வதேச ஆய்வு மாநாடு என்பனவும் இடம்பெறுகின்றன.
இதில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம், இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களின் சுற்றுலா அமைச்சுக்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாண – கலாசாரத் திணைக்களம், பனை அபிவிருத்திச் சபை, வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், வனவளப் பாதுகாப்புச் சபை, சிறு கைத்தொழில் முயற்சியாளர் சங்கம், வடக்கு மாகாண வணிகர் கழகம், வன பாதுகாப்புத் திணைக்களம், மத்திய கலாசார நிலையம், தகவல் தொழில் நுட்பப் பங்குதாரர்கள், வடக்கு மாகாண சுற்றுலா ஒன்றியம், அம்மாச்சி உணவகம் – விவசாயத் திணைக்களம், கருவி மாற்றுத் திறனாளிகள் சமூக வள நிலையம், பராம்பரிய உணவு நிறுவனங்கள் மற்றும் பல உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
“உலக சுற்றுலா தினத்தை ஒட்டிய கண்காட்சியில் கிராமியக் கைத்தொழில் உற்பத்தியில் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட ஆக்கங்களைக் காட்சிப்படுத்துவதுடன் உணவுத் திருவிழா ஒன்றினையும் ஒழுங்கு செய்திருக்கிறோம். இதில் பராம்பரிய உணவுப் பொருட்களும் மற்றும் விடுதிகளால் நவீன உணவுகளையும் வழங்க ஏற்பாடாகியிருக்கிறது. இக்கண்காட்சியைப் பார்வையிடவருபவர்கள் அங்கு நடைபெறவிருக்கும் உணவுத் திருவிழாவில் பங்கேற்றபடி அங்கு நடைபெறவிருக்கும் கலை நிகழ்வுகளையும் கண்டு களிக்கலாம். இலங்கையின் பிரபல்யமான சுற்றுலா மையங்கள், தலங்கள் தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தையும் அறிந்து கொள்வதற்கு இச்சுற்றுலாத் தின தேசிய நிகழ்வுக்கு வருமாறு பொதுமக்களை அன்போடு அழைக்கிறோம்.பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட பேருந்துச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் – பேராசிரியர் க.தேவராசா தெரிவிக்கின்றார்.