தமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (3,500 கோடி ரூபாய் ) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதனால் இந்திய மாநிலங்களில் நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் வினியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாடு வறட்சி, மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்திப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் இந்த கடனுதவி தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக அமையும் என கூறப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 நகரங்கள் பயன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது