ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக சில்வா , நாமல் குமார ஆகிய இருவருக்குமிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களுக்கமைய, நாமல் குமாரவின் குரல் பரிசோதனைக்காகவே அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அவரை இன்று அரச இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவுக்கு முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு கோட்டை மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமைக்கமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தாரென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது நாமல் குமார தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இதன்போது முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது