உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரியின் மருமகன் முர்டாஸா டுபாயில் வைத்து பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈடன் வீட்டு வசதித்திட்ட ஊழல் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனியார் வீட்டு வசதி ஊழலில் முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இதன மூலம் ஈடன் வீட்டு வசதி ஊழலில் மிகப்பெரிய திருப்புமுனை உருவாக்க்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இவரே ஈடன் வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டவர். ஈடன் வீட்டு வசதித்திட்டத்தால் 200 முதல் 300 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டு வசதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பான வழக்குகளை இப்திகார் சவுத்ரி தானே தனிப்பட்ட முறையில் விசாரித்து, அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கின்றார்.
இந்த வழக்கில் இப்திகார் சவுத்ரியின் மருமகன் மட்டுமல்ல, மகள், சம்மந்தி, மகன் அர்சாலன் இப்திகார் ஆகியோரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் இதனுடன் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.