அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஸ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொணடிருந்தது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் சாராம்சமமாக அமைந்திருந்தது.
எனினும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க், நியூயோர்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது,
ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கும் நல்லது. எனவே ஈரான் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறவரையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் நீடிப்பதில் உறுதி கொண்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானின் பிராந்திய நடத்தை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்த கவலைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.