இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் அமைப்பு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres ) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளருக்கு ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஊடக சுதந்திரம் நல்லிணக்கம் ஆகியவற்றை பலப்படுத்துவதில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றங்களை நேரில் காண்பதற்காக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள செயலாளர் நாயகம் கூடியவிரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.