தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியமைக்காக உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ரெஸ்லா (Tesla ) நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலன் மஸ்க் ( Elon Musk) பங்குச் சந்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து அவர் மீது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
ரெஸ்லா நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளை திரும்பப்பெற்று, அந்நிறுவனத்தை முழுதும் தனியார் நிறுவனமாக மாற்றும் அளவுக்கு தன்னிடம் போதுமான நிதி உள்ளதாக எலான் மஸ்க் கூறியது பொய்யானதும் தவறாக வழிநடத்திய செயல் எனவும் அமெரிக்க நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ரெஸ்லா நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர்களை அபராதமாக நீதிமன்றம் விதித்துள்ளதுடன் அடுத்த 45 நாட்களுக்குள் ரெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்வதற்கு தடை ஏதும் இல்லை எனவும் இரண்டு இயக்குனர்களை நியமித்து தலைவர் பொறுப்பை கவனித்துக்கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ரெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக எலன் மஸ்க் முடிவு செய்துள்ளார். அண்மையில் ஜப்பானை சேர்ந்த தொழிலதிபரை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை பற்றி எலன் மஸ்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது