Home இலங்கை  “ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு”

 “ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு”

by admin

சனி முழுக்கு 10

இந்த நாளிலை பொன்னம்பலண்ணை வலு பிசி. ஒண்டுமில்லை புரட்டாசி பிறந்திட்டுது. மற்ற நாளிலை  சோனக தெருப் பக்கம்போய் அது இது எண்டு வீட்டுக்குத் தெரியாமல் நடத்தினாலும் புரட்டாசி மாதத்துச் சனிக்குப் பேய்க்காட்டேலாது பாருங்கோ. சனிபகவான் காலைக் கையை முடக்கிப்போடுவர் எண்டு பயம். அதாலை இந்த மாசம் மட்டும் நல்ல பிள்ளையா இருந்து எல்லாத்தையும் மறந்து விரதம்.  கொஞ்சம் வெய்யிலிலை நடந்தாலும்  களைப்பு வந்திடுகிது. அதாலை ஒரு அலுவலும் பாக்கிறேல்லை. மத்தியானம் விரதச் சாப்பாடு முடிஞ்சால் சாக்குக் கட்டிலைவிட்டு அரக்கிறேல்லை. மனுசிக்கு வலு சந்தோஷம். தன்னை விட்டிட்டு  அங்காலை இங்காலை போறேல்லை எண்டு. என்னத்தை  விட்டாலும் சனிக்கிழமயளிலை உங்களைச் சந்திக்கிறதை நிப்பாட்டேலுமோ? இல்லையெல்லே! அது தான் ஒரு சின்னக் கதை சொல்லிப்போட்டு போகப்போறன்.

போன கிழமை தெல்லிப்பழையிலை இருக்கிற ஒரு பள்ளிக்குடத்துக்கு ஒரு வாத்தியாரைச் சந்திக்கப் போன்னான். எங்கடை வீட்டுக்கருகிலை இருக்கிற தங்கமணியின்ரை பெடிச்சிக்கு அந்தப் பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற ஒரு வாத்திப் பெடியின்ரை சாதகம் பொருந்தீட்டுது.  அப்ப தங்கமணி வந்து நாண்டு கொண்டு நிக்கிறாள் “பொன்னம்பலண்ணை உனக்குத் தெரிஞ்சவை  ஆரேன் அந்தப் பள்ளிக்குடத்திலை இருப்பினம். போய்  ஒருக்கா விசாரிச்சிட்டு வாவன்” எண்டு. அவளையும் முகத்தை முறிக்கேலாது. ஏனெண்டால் அவள்தான் தடக்குப்பட்டால் கைகாலுக்கை நிக்கிறவள். அதோடை அவளின்ரை வீட்டிலை என்ன விசேஷம் எண்டாலும் ஒரு பங்கு எங்களுக்கு வந்திடும். அதாலை  எங்கடை தூரத்துச் சொந்தக்காரன் ஒருதன் அங்கை வாத்தியாரா இருக்கிறான் எண்டதை மணந்து பிடிச்சு அறிஞ்சு வெளிக்கிட்டுப் போனன். ஒரு பக்கம் வெய்யில் சூடு. மற்றப்பக்கம் பஸ்ஸிலை சன வெக்கை. அடிச்சுப் பிடிச்சுப் போனால் அங்கை நான் சந்திக்கப்போன வாத்தியார் வகுப்பெடுத்துக் கொண்டு நிக்கிறார். அப்ப அங்கை நிண்டவை அங்கை கிடந்த கதிரையைக் காட்டிச் சொல்லிச்சினம்  “இருங்கோ வந்திடுவர்”  எண்டு.  எப்பன் இருந்தன்.

பக்கத்து அறையிலை ஒரு வாத்தியார்  “ஏது உனக்கு உவ்வளவு காசு? ஆர் தந்தவை? உண்மையைச் சொல்லு. இல்லாட்டிப் பள்ளிக்குடத்திலை இருந்து சேட்டுபிக்கற் தந்து கலைச்சுவிட்டிடுவம்” எண்டு சத்தம்போட்டுக் கேக்கிது. அதுக்கு அவருக்கு முன்னாலை நிண்ட பெடி  “மாமா தந்தவர்” எண்டு சொல்ல “மாமா என்ன கோடீஸ்வரனோ இவ்வளவு காசைத் தந்து சிலவழிக்கச் சொல்ல” எண்டு வாத்தியார் கேக்க, “ஓம். அவர் பெரிய வசதியா சுவிஸிலை இருக்கிறார். முந்தி இஞ்சையும் வியாபாரந்தான் செய்தவர். சுவிஸிலையும் வியாபாரந்தான் செய்யிறார்.” எண்டு அந்தப் பெடி சொல்லக் கடைசியா அதிபரிட்டைக் கொண்டந்தவை. அதிபர் உடனை சொன்னார் “அவன்ரை பெற்றாரை நாளைக்கு என்னை வந்து சந்திக்கச் சொல்லிக் கடிதம் ஒண்டு எழுதி அவன்ரை கையிலை குடுத்துவிடுங்கோ. காலையிலை அவன் அவன்ரை பெற்றாரோடை வர வேணும். இல்லாட்டிப் பள்ளிக்கூடத்துக்கை அனுமதியாதையுங்கோ” எண்டு சொல்லி அனுப்பி விட்டிட்டார்.

இப்பதான் யோசிச்சுப் பாத்தன் உப்பிடி எல்லாம் ஏன் நடக்கிதெண்டு. அந்த வாத்தியாரைக் கூப்பிட்டுக் கேட்டன். நடந்தது என்ன எண்டு?  இப்ப ஒரு கிழமையா அந்தப் பெடி எந்த நாளும் 500 ரூபா கொண்டு வந்து கன்ரீனிலை செலவழிக்கிறானாம். அது இது எண்டு வாங்கிச் செலவழிக்கிறதும் சினேகிதருக்கு வேண்டிக் குடுக்கிறதுமாத்தான் அவன்ரை நடத்தை. அந்தக் கிழமையிலையிருந்து அவனுக்குப் பள்ளிக்குடத்திலை இருக்கிற பெரிய வகுப்புப் பெடியள் எல்லாம் சினேகிதமா விட்டினமாம். இதை வேறை  பெடியள் வந்து வகுப்பாசிரியரிட்டைச் சொல்லி அவ தான் ஒழுக்கத்துக்குப் பொறுப்பானவரிட்டை கேசைக் குடுத்திருக்கிறா. அதைத்தான் அவர் விசாரிச்சவர். அந்தப் பெடியன்ரை மாமன் சுவிஸிலை இருக்கிறவர். போனமாதம் கோயில் திருவிழாச் செய்ய வந்தவராம். வந்து போகேக்கை தான் சிலவழிச்ச காசிலை மிஞ்சின ஏழாயிரம் ரூபாவை “வேணுமானதை வேண்டு” எண்டு சொல்லி அவன்ரை தாய் தேப்பனுக்குத் தெரியாமல் பெடியின்ரை கையிலை காசைக் குடுத்திட்டுப் போயிருக்கிறார். அவன் என்ன செய்வன். வேணுமானதை வேண்ட அவனுக்குக்  கன்ரீன்தான் கிடைச்சிது. வேண்டித் திண்டு குடிக்கிறான். நல்ல காலம் அதுக்கங்காலை அவன் போகேல்லை. கொஞ்சம் வளந்தவன் எண்டால் வெளியிலை சிநேகிதப் பெடியளோடை போய் வேணுமான வேறை சாமான்களை வேண்டத் துவங்கியிருந்தால் முழுக் குடும்பத்தின்ரை கதையும் கந்தலாப் போயிருக்கும்.

அப்ப உது ஆற்றை பிழை? வந்த பெடியின்ரை மாமன்ரை தான்.  அவர்  மிஞ்சின காசைப் பெடியிட்டையே குடுக்கிறது?  அவரிட்டைப்  பெடி நல்லா வரவேணும் எண்ட கரிசனை இருந்திருந்தால் அந்தப் பெடியின்ரை தாய் தேப்பனைக் கூப்பிட்டு இந்தாங்கோ  காசு கொஞ்சங் கிடக்கு, இதிலை அவனுக்கு விருப்பமானதை வேண்டிக் குடுங்கோ எண்டு அவையிட்டைக் காசு குடுத்துச் சொல்லிப் போட்டுப் போயிருப்பர். அப்ப அவர் செய்ததுதான் பிழையான காரியம். தான் அந்தப் பெடியின்ரை மனசிலை இடம் பிடிக்க வேணும் எண்டு அவர் செய்த கெம்பர் வேலை இப்ப எத்தினை பேருக்குப் பெருந்தலை இடியாப் போச்சுது பாருங்கோ. இப்ப தாய் தேப்பன் தங்கடை தங்கடை வேலைவெட்டியை விட்டிட்டுப் பெடியோடை பள்ளிக்குடத்துக்கு அலைய வேணும். அந்தப் பள்ளிக்குடத்திலை இருக்கிற வாத்திமாரும் வேறை சோலியளைவிட்டிட்டு இவையை விசாரிச்சுக் கொண்டு திரிய வேணும். இப்ப கடைசியா நடந்ததைப் பாத்தால் தேவை இல்லாத விசியங்கள் எல்லாம் எப்பிடி? எப்பிடி? முளைக்கிதெண்டது தெரியும். மாமன்காரனுக்கும் புத்தி குறையப்போலை தெரியிது. விசாரிச்சால் அவனும் அவ்வளவு படிக்கேல்லையாம். ஏதோ தப்பித்தவறி வெளிநாடு போட்டான் எண்டு சொல்லிச்சினம். அவன்ரை லக்குத்தான் அவனைக் கொண்டுபோய் சுவிஸிலைவிட்டிட்டுது. அங்கை வியாபாரம் செய்யிறதாலை காசையும் அவன் அவ்வளவு கயிட்டப்படாமல்தான் உழைக்கிறான்போலை. அதாலைதான் காசின்ரை அருமை தெரியாமல்  ஏழாயிரத்தைத் தூக்கி அந்தச் சின்னப்பெடியிட்டை குடுத்திட்டுப்போட்டான்.

இப்பவும் ஏழாயிரத்தைக் கொண்டு தங்களின்ரை ஒரு மாசச் செலவை ஓட்டுற குடும்பம் எத்தினை இருக்குதெண்டது தெரியுமோ?  அது அந்தச் சுவிஸ்காரனுக்குத் தெரியுமோ, தெரியாது? அப்ப வந்து நிக்கேக்கை விசியம் விளங்காமல் பொறுப்பு மில்லாமல் நடந்திட்டுப் போனால்?  உவை வந்து நிக்கேக்கை தாங்களும் கெட்டு நிக்கிறவையையும் கெடப் பண்ணிப்போட்டுப் போனால்…என்ன கணக்கு? கொஞ்சம் தலையை விட்டு யோசியுங்கோ. நீங்கள் செய்யிறதாலை துன்பப்படுகிறது உங்கடை குடும்பம் மட்டுமில்லை…சங்கிலித் தொடராச் சமூகமும்…பிறகு தொடர்ந்து  ஊருலகமும்தானே..!

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More