தாம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.
தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று (01.10.18) காலை மட்டக்களப்பில் நடாத்தப்பட்டுள்ளது. இந்தப் பொராட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச சிறுவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் காணாமல்போனவர்களின் பிள்ளைகள் பல்வேறு ஏக்கங்களுடன் காணப்படுவதாகவும் அவற்றினை புரிந்துகொண்டு சர்வதேசம் உதவவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு பேரணி, கவன ஈர்ப்பு போராட்டத்தில் வடகிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சின்ன வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து, பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது. காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமது தந்தையினரை தங்களிடம் ஒப்படைக்க இந்த சிறுவர் தினத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவர்களும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.