இந்தியாவின் டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது காவற்துறையினர் தடியடி நடத்தியது அராஜகத்தின் உச்சகட்டம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் ‘கிசான் கிராந்தி’ என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி பயணமாகினர்.
நேற்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லைப் பகுதியை சென்றடைந்தது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை காவற்துறையினர் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
இதனால் விவசாயிகளுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக காவற்துறையினர் தண்ணீர் மூலத் தாக்குதலையும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், காந்தி ஜெயந்தி அன்று டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது பாரதீய ஜனதா அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் அராஜகத்தின் உச்ச்கட்டம் என தெரிவித்துள்ளார்.