லோக் ஆயுக்தா தொடர்பாக தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒத்திவைத்துள்ளார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் அன்னா ஹசாரே லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான ஒக்டோபர் 2-ம் திகதி மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய அமைச்சர் கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதனையடுத்து நேற்றையதினம் ஆரம்பிக்கவிருந்த தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.
மேலும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் திகதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.