ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதி மற்றும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் கைது என்பனவற்றின் பின்னணியில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏயும் இந்தியாவின் உளவுத்துறையான றோவுமே உள்ளதாக தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், அவ்வமைப்பின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏனைய தேரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை, தேரர்களாகிய தம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும ஞானசார தேரர், தொடர்ச்சியாக இந்த நாட்டுக்காகத் குரல்கொடுத்து வந்தார் எனவும் இதனை ஏற்றுக்கொள்ளாத சிலரும் காணப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களமும் காவல்துறையினரும் பௌத்த தர்மத்துக்கு எதிராகவே செயற்படுகின்றனர் எனவும் இவர்கள் நீதிமன்றத்துக்கு வழங்கிய தவறான தகவலின் பிரகாரமே, ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னைக் கொலை செய்ய முற்பட்டவருக்கே பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ஞானசார தேரருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போதே, றோ, சி.ஐ.ஏ ஆகியவற்றின் மீதான தனது சந்தேகத்தை முன்வைத்த அவர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவற்றையும் அவர் இங்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
That everyone knows that those foreign intelligence agents rules our nation. There why our folks falls in their prey?????