இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திலுள்ள மவுண்ட் சோபுடன் என்ற எரிமலை இன்று செவ்வாய்க்கிழமை காலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிப்பைத் தூண்டி விட்டிருக்கலாம் எனவும் எனினும் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலே அவைகள் வெடிக்கும் வண்ணம் இருந்தன எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மவுண்ட் சோபுடன் எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்தோனேசியாவில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் 130 எரிமலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.