விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரனாக பிரபல நடிகர் பாபிசிம்ஹா நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தி்ரைப்படங்களாக உருவாக்கம் பெறுகின்றன. இந்த நிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்கள் ஆகும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாத்திரம் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் திரைப்படமா க உருவாக்கம் பெறவுள்ளது. ஸ்டூடியோ 18 என்னும் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகின்றார். இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையின் இறுதிக்கட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். எனினும் நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.