நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணமென்பதால், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய ஒன்றிணைந்த எதிரணி, அவ்வாறு அவர் பதவி விலகவில்லையாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.
பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில், நேற்று (03.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களின் போது ஏற்பட்ட நிதி மோசடி காரணமாக, அரசாங்கத்துக்கு, ஒரு ட்ரில்லியன் அதாவது பத்து பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதென்றும் இதுவே தற்போது இந்நாட்டில் எற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தண்டிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் அவரிடம், இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மேலும், பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட முன்னாள் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு, நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்கப்போவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்படவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
எரிபொருளுக்கான விலை சூத்திரத்தின்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல், மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்குமெனவும் இதனால், ஜனாதிபதி இந்த விலைச் சூத்திரத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.