குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.குடாநாட்டில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மன்னார்- பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வடமாகாணசபையிலும் அதற்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது.வடமாகாணசபையின் 133வது அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போதே ஏகமனதான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவை வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபைக்கு முன்மொழிந்தார்.
அதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சபை ஏகமனதாக ஒப்புதல் வழங்கி நிறைவேற்றியுள்ளது. இது குறித்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் கருத்து தெரிவிக்கையில் ,
29.01.2018ம் திகதி யாழ்.குடாநாட்டின் நீர் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் நான் கலந்து கொண்டிருந்தேன். இதன்போது வருடம் பூராகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலி ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் கடலை சென்றடைகிறது.
இந்த நீரை வழிமறித்து பொருத்தமான ஒரு இடத்தில் தேக்குவதன் ஊடாக யாழ்.குடாநாட்டின் குடிநீர் தேவைக்கா ன நீரை கொண்டுவர இயலும் என கூறியிருந்தேன். அந்த கூட்டத்திலேயே இவ்வாறான யோசனையை இதுவரை எவரும் கூறியிருக்கவில்லை எனவும்,
இந்த யோசனை ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நடைமுறைக்கு சாத்தியமானதும் என வடமாகாண பிரதி பிரதம செயலாளர் கூறியிருந்தார். ஆகவே எனது யோசனை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுங்கள் என நான் பிரதி பிரதம செயலாளரிடம் கேட்டிருந்தேன்.
அதனடிப்படையில் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட பிரதி பிரதம செயலாளர் எனது யோசனை தொடர்பான சாத்தியக் கூற்று அறிக்கை ஒன்றிணை தயாரித்து பெற்றுள்ளார்.
பின்னரதனை இறுதி செய்து கொண்டு கடந்த 02.08.2018ம் திகதி பிரதமர் தலமையில் நடைபெற்ற அதிகாரிகளுக்கான சந்திப்பில் அந்த சாத்தியக்கூற்று அறிக்கையினையும் எனது யோசனையினையும் பிரதம செயலர், பிரதி பிரதம செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்
முன்வைத்துள்ளனர்.
அது பிரதமரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியானது இந்த திட்டத்திற்கான நிதியை வழங்க முன்வந்திருக்கின்றது.
இந்த திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பரப்பு குளத்தில் நீர்த்தேக்கத்தை உருவாக்கி அங்கிருந்து குழாய் மூலமாக நீரை யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவருவதன் ஊடாக குடாநாட்டின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும் இரணைமடு திட்டம் உள்ளிட்ட மற்றைய நீர்ப்பாசன திட்டங்கள் தனியானவை. அவற்றுடன் இந்த திட்டமானது சேராது. மேலும் இரணைமடு குளத்தின் கீழ் 7 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 16 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
அதன் ஊடாக அந்த விவசாயிகளின் தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்யலாம். அங்கு எங்களுடைய தலையீடுகளை தவிர்க்கலாம் என அண்மையில் நீர் சம்மந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் நான் கூறியிருந்த விடயத்தை நீர் சம்மந்தமாக நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் சிவபாலன் கூட ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
எனவே பாலி ஆற்று திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கவேண்டும். என கேட்டதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முழுமையாக செயற்பட்ட
பிரதம செயலாளர் பத்திநாதன், பிரதி பிரதம செயலா ளர் சண்முகானந்தன், நீர்ப்பாசன பணிப்பாளர் பிறேமகுமார் ஆகியோருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறுவதுடன், இந்த திட்டத்தில் தொடர்ந்தும் அவர்கள் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு
இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும். இந்த திட்டத்தினால் எவருக்கும் பாதிப்பில்லை என கூறினார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திட்டத்தை வரவேற்று வழிமொழிந்ததுடன் சபை ஏகோபித்த ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என கூறினார். அதற்கமைய சபை ஏகமனதாக ஆதரவை வழங் கியுள்ளது.