பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டையே நாசப்படுத்திவிட்டது எனவும் திறமையான இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெறுவதிலேயே இலக்காக இருக்கிறார்கள் எனவும்
அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் கவலை வெளியிட்டுள்ளார்
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்ட பின், மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சொந்த நாட்டுக்கு விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவித்த அவர் வீரர்களுக்கிடையே இருந்த ஊதியப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்ட போதும் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டி வந்தபின், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நாசமாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டின் திறமையான, இளம் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஒப்பந்தத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட ஊதியப் பிரச்சினை காரணமாக, நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டிவைன் பிராவோ, கிரண் பொலார்ட், சுனில் நரேன் ஆகியோர் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், மேற்கிந்திய தீவுகளுக்காக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு ஏனைய நாட்டு லீக்போட்டிகளில் விளையாட முயல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறந்த சுழற்பந்துவீச்சாளரான கார்ல் கூப்பர் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5ஆயிரத்து 762 ஓட்டங்களும் , 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 671 ஓட்டங்களும் பெற்றதுடன் டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில் 194 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கூப்பார் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயற்பட்டு வருகின்றார்.