வடக்கு அமைதியாகவுள்ளது. வடக்கை குழப்ப எத்தனிப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த உளவுத் துறையூடாக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் தலைமையில் அவ்வமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விஷேட ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டு வடக்கு நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் போதே சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,, கடந்த ஒரு வருடமும் நான்கு மாதங்களுமாக வட மாகாண சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபராக கடமையாற்றுவதாகவும், இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போதும் ஒரு வருடம் யாழ். சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சராக கடமையாற்றியிருந்த நிலையிலும், வடக்கு தனக்கு ஒன்றும் புது இடமல்ல எனவும் வடக்கு அமைதியாகவே உள்ளது என்பதை உறுதிப் பட கூற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அமைதியில்லை என் கூறுவோர் ஆவா குழு தொடர்பிலான சம்பவங்களை அது தொடர்பில் முன்வைக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான ஆவா குழுவால் இன்று வரை எந்த கொலைகளும் புரியப்படவில்லை. தெற்கில் உள்ள குழுக்களைப் போன்றே வடக்கில் இந்த ஆவா குழு இயங்குகின்றது. எனினும் தெற்கு குழுக்கள் அளவுக்கு இந்த குழு பயங்கரமானது அல்ல. எனத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, வடக்கில் தனது கட்டுப்பாட்டில் 53 காவல் நிலையங்கள் உள்ளதாகவும், எனினும் இந்த ஆவா குழு பிரச்சினை, யாழ்., கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய காவற்துறைப் பிரிவுகளிலேயே இப்பிரச்சினை உள்ளது. அதிலும் ஆவ அகுழுவுடன் தொடர்புடைய இளைஞர்கள் இணுவில், கொக்குவில் எனும் இரு ஊர்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.